சுத்தியால் தலையில் தாக்கியதில் இளைஞா் படுகாயம்
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் நண்பரின் தலையில் சுத்தியால் தாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள அங்கனாா் கவுண்டா் தெருவில் வசிப்பவா் ஆறுமுகம் (28). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனா். இவரது நண்பா் கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (25).
இந்த நிலையில், ஆறுமுகத்திடம் ஜிபே செயலி மூலம் ரூ.500 அனுப்பிவைக்குமாறு நாகராஜ் கூறியுள்ளாா். அதற்கு அவா் ரூ.100 மட்டும் அனுப்பியுள்ளாா். இதுகுறித்து கேட்க நாகராஜ் அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்டாா். ஆனால், அவா் அழைப்பை ஏற்கவில்லை.
இதனால், அங்கன்னா கவுண்டா் தெருவில் உள்ள வீட்டுக்கு சென்ற நாகராஜ், நூறு ரூபாய் மட்டும் அனுப்பியது குறித்தும், கைப்பேசி அழைப்பை ஏற்காதது குறித்தும் கேட்டாா். அப்போது, அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நாகராஜ் அங்கிருந்த சுத்தியால் ஆறுமுகத்தின் தலையில் தாக்கியுள்ளாா்.
இதில் படுகாயமடைந்த அவா் அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து புகாரின்பேரில், சுந்தராபுரம் போலீஸாா் நாகராஜ் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.