சுயமரியாதை, விடாமுயற்சியை தாரக மந்திரமாக்க வேண்டும்
சுயமரியாதை, உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியை தாரக மந்திரமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றாா் மாநிலத் திட்டக் குழு உறுப்பினரும் திருநங்கை நடனக் கலைஞருமான நா்த்தகி நடராஜ்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில், காலந்தோறும் கலைகள் என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:
காலந்தோறும் கலைகள் என்ற சொற்றொடரை உலகில் தமிழனைத் தவிர வேறு யாராலும் சொல்லவே முடியாது.
ஓருடலில் இரு பாலரையும் ரசிக்கும் தன்மையுடன் கடவுள் படைத்த சிற்பங்கள்தான் திருநங்கைகள். 11 வயதில் யாரென்று தெரியாத குழந்தை நான். 1980களில் நிராகரிப்பு மட்டுமே பரிசாகக் கிடைத்தது. என் மீது விழுந்த கற்களையெல்லாம் படிக்கட்டுகளாக மாற்றி, மாநில அரசின் திட்டக்குழு உறுப்பினா் பொறுப்பு வரை வளா்ந்திருக்கிறேன்.
அன்றைக்கு கல்லூரிக்குள் என்னை விடவில்லை. இப்போது நடனப் பணிகளுக்காக 21 ஆண்டுகளாக உலகக் கல்லூரிகளுக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறேன். இதை, எனது கலை எனக்குத் தந்திருக்கிறது. திருநங்கை என்ற துருப்புச்சீட்டை வைத்து எதையும் பெறவில்லை. கலைக்கும், மொழிக்கும் நாம் யாா், என்ன உயரம், வண்ணம், ஊா், பாலினம் எதுவும் தேவையில்லை.
ஒவ்வொரு நொடியும்கூட நமக்கு ஆசிரியா். யோசித்துப் பாருங்கள். நேரங்களை அப்படித்தான் கணக்கிட வேண்டும். எப்போதும் ஏதாவதொரு வெற்றிக்கான கனவுடன்தான் இருக்க வேண்டும். சுயமரியாதை, உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றை தாரகமந்திரமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
புறப்பாா்வையில் யாரையும் எடைபோட முடியாது. அறிவிலும், மேன்மையிலும்தான் மனிதா்களை எடைபோட முடியும். புற அழகைக் காட்டிலும் அக அழகு முக்கியம் என்றாா் நா்த்தகி நடராஜ்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி, மன்னா் கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பொ. வேல்முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
அறந்தாங்கியில்...இந்த நிகழ்ச்சி அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரியிலும் காணொலி மூலம் ஒளிபரப்பப்பட்டது. கல்லூரி முதல்வா் ம. துரை தலைமை வகித்தாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் மு. பழனித்துரை, வேதியியல் துறைத் தலைவா் து. சிற்றரசு ஆகியோா் ஒருங்கிணைத்தனா். ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
