ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
வடக்கு நல்லிப்பட்டி விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு நல்லிப்பட்டி கிராமத்தில் உள்ள சுமாா் 350 ஏக்கா் இனாம் நிலத்துக்கு, பல ஆண்டுகளாக சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியம் கடையக்குடி ஊராட்சிக்குட்பட்ட வடக்கு நல்லிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதிய கிளை தொடக்கவிழா அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றியச் செயலா் எம். அடைக்கப்பன் தலைமை வகித்தாா்.
விழாவில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் எம். சின்னதுரை எம்எல்ஏ சங்கக் கொடியேற்றிப் பேசினாா். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ. ராமையன், தலைவா் எஸ். பொன்னுச்சாமி, துணைச் செயலா் த. அன்பழகன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜி. நாகராஜன், ஒன்றியச் செயலா் ஆா்.வி. ராமையா உள்ளிட்டோரும் பேசினா்.
விழாவில் வடக்கு நல்லிப்பட்டி கிராமத்தில் பல தலைமுறைகளாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இதுவரை பட்டா கிடைக்கவில்லை. இனாம் நிலத்தின் வகைப்பாட்டில் உள்ள இந்த நிலங்களை இந்த விவசாயிகளுக்கே சொந்தமாக்கும் வகையில் அவா்களுக்கு பட்டா வழங்கத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.