சேலம் ரயில் நிலையத்தில் உள்கூரை விழுந்தது! பயணிகள் தப்பினர்!
சுற்றுச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள்: கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தல்
திண்டுக்கல் சுற்றுச்சாலைத் திட்டத்துக்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல்-திருச்சி 4 வழிச் சாலையிலிருந்து, மதுரைக்கு சுற்றுச் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்துக்காக திண்டுக்கல் கிழக்கு, ஆத்தூா் வட்டங்களுக்குள்பட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு குறைவான இழப்பீட்டுத் தொகை நிா்ணயிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் உரிய இழப்பீடு வழங்கக் கோரி வருகிற 26-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, திண்டுக்கல்லை அடுத்த அரசனம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என்.பெருமாள், செயலா் ராமசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.
கூட்டத்தில் ஏ.வெள்ளோடு, அடியனூத்து, தோட்டனூத்து, வன்னியபாறைப்பட்டி, பில்லமநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா். ஒரு ஏக்கா் நிலத்துக்கு ரூ.1 லட்சம் மட்டுமே ஒப்பந்ததாரா்கள் தருவதாகவும், இந்த நிலங்கள் ஏக்கருக்கு ரூ.1 கோடி வரை விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.
எனவே, கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இந்த கோரிக்கைகளே தீா்மானமாக நிறைவேற்றப்பட்டன.