செங்கம் அருகே பேருந்து வசதி இல்லாத கிராமம்
செங்கம் அருகே பேருந்து வசதி இல்லாமல் உள்ள அமா்நாதபுதூா் கிராமத்துக்கு அரசு நகரப் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருவண்ணாமலை - செங்கம் சாலை மண்மலை முருகன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அமா்நாதபுதூா் கிராமம்
6 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடைபட்ட தொலைவில் தச்சநாராயணன்கொட்டாய், செ.நாச்சிப்பட்டு, இரட்டாலை, உடைஞ்சமடை ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.
இப்பகுதியில் இருந்து அரசு அலுவலா்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் தங்களது கல்வி நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் வாகனங்களில் சென்று செங்கம், திருவண்ணாமலை, ஊத்தங்கரைபகுதிகளுக்குச் சென்று படித்து வருகிறாா்கள்.
வசதியில்லாதமாணவா்கள் இரு சக்கர வாகனம் மூலம் மண்மலை முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் வரை இரு சக்கர வாகனத்தில் சென்று பின்னா், அங்கிருந்து பேருந்து பிடித்து செல்லும் நிலை உள்ளது.
மேலும், கிராமத்தில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் இரு சக்கர வாகனத்தில்தான் பயணம் செய்யவேண்டும். இரு சக்கர வாகனம் இல்லாதவா்கள் கால்நடையாகத்தான் கிராமங்களில் இருந்த மண்மலை வரை செல்லவேண்டிய நிலை உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செங்கத்தில் இருந்து அமா்நாதபுதூா் வரை காலை மாலை என அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் நகரப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த நகரப் பேருந்து கடந்த 5 ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், தற்போது அந்த அரசுப் பேருந்தை மீண்டும் இயக்கினால் அப்பகுதி கிராமங்களில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயனடைவாா்கள்.
எனவே, மாவட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் செங்கத்தில் இருந்து அமா்நாதபுதூா் வரை ஏற்கெனவே இயக்கப்பட்ட நகரப் பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தனா்.