நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய...
`செத்துத் தொலைடா...’ - பழிதீர்க்கப்பட்ட ஆரணி இளைஞன்; முகத்தில் கொடூர வெட்டு; பதற வைத்த கொலை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் உள்ள ஆரணிப்பாளையம் சாந்தா தெருவைச் சேர்ந்தவர் அருணகிரி. இவரின் மகன் கரிமா என்கிற விக்னேஷ் (27). ஏ.சி, வாஷிங் மெஷின் பழுது பார்க்கும் வேலை செய்துவந்த விக்னேஷ் மீது கடந்த 4-11-2021 அன்று போத்து என்கிற மணிகண்டன் என்பவரைக் கொலை செய்ததாக வழக்கொன்று நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை, ஆரணியில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் 10-8-2023 லிருந்து நடைபெற்று வருகிறது. கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த விக்னேஷ் ஜாமீனில் வெளியே வந்த பிறகு மகாலட்சுமி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஒன்றரை வயதில் லியாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது 5 மாத கருவையும் வயிற்றில் சுமந்துகொண்டிருக்கிறார் மகாலட்சுமி.

இந்த நிலையில், வரும் (மார்ச்) 21-ம் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் தனது கூட்டாளிகள் மூன்று பேருடன் ஆஜராகவிருந்தார் விக்னேஷ். இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக தன்னால் கொலையுண்ட போத்து மணிகண்டன் தரப்பினரிடம் சமரசம் பேசிவந்திருக்கிறார் விக்னேஷ். நேற்று முன்தினம் (15-3-2025) சனிக்கிழமை இரவு 9.30 மணியளவிலும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தன் நண்பர்கள் மெக்கானிக் சபரி, பவன்குமார் ஆகியோருடன் புதுக்காமூர் பகுதிக்கு பைக்கில் சென்றார். அங்கு மதுபோதையில் இருந்த எதிர்தரப்பைச் சேர்ந்த 9 பேர் முன்கூட்டியே பழிதீர்க்கும் திட்டமிடலுடன் தயாராக இருந்திருக்கின்றனர்.
விக்னேஷ் வந்தவுடன் சூழ்ந்துகொண்டு `செத்துத் தொலைடா... வெட்டுங்கடா அவனை’ என கத்தி கூச்சலிட்டுகொண்டே சரமாரியாக தாக்கத் தொடங்கினர். முகத்தை குறி வைத்து காலால் உதைத்து... கத்தியால் முகத்தில் பலமாக தொடர்ந்து ஆக்ரோஷமாக வெட்டினர். பீர்பாட்டில்களையும் உடைத்து முகத்தில் குத்தி கிழித்ததோடு, கழுத்திலும் மார்புப் பகுதியிலும் பீர் பாட்டிலின் கூர்மையான பகுதியை குத்தி உள்ளே இறக்கினர். இதனால், ரத்தம் பீறிட்டு வெளியேறியது. சிறிது நேரத்தில் நிகழ்விடத்திலேயே விக்னேஷ் துடிதுடித்து உயிரிழந்தார். உயிரைப் பறித்த கொண்டாட்டத்தில் `இந்த ஏரியாவுல இவன் சாவு எல்லோரையும் பயமுறுத்தணும்’ என்று ரத்தம் வடிந்துகொண்டிருந்த கத்தியைத் தரையிலும் கெத்தாக தேய்த்துவிட்டு கொலையாளிகள் 9 பேரும் அங்கிருந்து தப்பிஓடியிருக்கின்றனர். இவ்வளவு கொடூரமும் அரை மணி நேரத்தில் நடந்து அடங்கியது.

விக்னேஷுடன் பைக்கில் வந்த அவரின் நண்பர்கள் இருவரும் கொடூரத் தாக்குதலை பார்த்ததும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தொடக்கத்திலேயே ஓட்டம் பிடித்துவிட்டனர். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்ததும், ஆரணி நகரக் காவல் நிலையப் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் குற்றவாளிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
நேற்று முன்தினம் நள்ளிரவிலேயே, விக்னேஷ் கொலையில் தொடர்புடைய ஆரணிப்பாளையத்தைச் சேர்ந்த தனபால் (25), தாமோதரன் (24), கமல் (34) ஆகிய மூன்று பேரும் கண்ணமங்கலம் காவல் நிலையம் சென்று சரணடைந்தனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். தொடர்ந்து, ஆரணி தர்மராஜா கோயில் தெரு மற்றும் புதுக்காமூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (23), ஆடு என்கிற தினேஷ் (26), பிரசாந்த் (31), அசோக் (34) ஆகிய மேலும் நான்கு பேரையும் தேடிப்பிடித்து போலீஸார் கைது செய்தனர். இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திட்டம் வகுத்துக் கொடுத்த முக்கிய குற்றவாளிகளான வழக்கறிஞர் கணேஷ் மற்றும் இவரின் தம்பி ரமேஷ் ஆகிய மேலும் இருவரையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட 7 பேரையும் போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் கொண்டுவந்து அடைத்தனர்.

பழிக்குப் பழியாக மேலும் இருதரப்பு மோதல்கள் தொடரலாம் என்கிற அச்சமும் அப்பகுதியில் நிலவிகொண்டிருக்கிறது. இப்போது கைது செய்யப்பட்டவர்களில் பிரசாந்த் என்பவரின் தம்பி தான் 2021-ல் கொலை செய்யப்பட்ட போத்து மணிகண்டனின் உடன்பிறந்த அண்ணன். கரிமா விக்னேஷ் உட்பட நான்குபேர் கும்பல், போத்து மணிகண்டனை முகத்தை சிதைத்துக் கொன்றார்கள். கருங்கல், செங்கல் என முகம், தலையை கற்களால் தாக்கியே கொடூரமாகப் போத்து மணிகண்டனின் உயிரைப் பறித்தார்கள். இதே பாணியில் பழிதீர்க்கத்தான் காத்திருந்து விக்னேஷின் கதையை முடித்திருக்கின்றனர். போத்து மணிகண்டனின் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் மூன்று பேரையும் இந்த கும்பல் குறி வைத்திருப்பதாகச் சொல்லப்படுவதால், பழிதீர்ப்பு படலம் தொடரும் என்கிறது போலீஸ்.