சென்னையில் இதழியல் கல்வி நிறுவனத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) தொடங்கிவைத்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதில் ஓராண்டு முதுகலை இதழியல் படிப்புக்கு விண்ணப்பங்களும் கோரப்பட்டிருந்தன.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த இதழியல் நிறுவனத்தில் 2025-2026-ம் கல்வியாண்டு முதல் இதழியல் துறையில் முதுநிலை பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அச்சு, தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கும் வகையில் பாடத்திட்டம் உள்ளது.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இதழியல் கல்வி பயிற்றுவிக்கப்படும் வகையில் பாடத்திட்டமும் இதழியலுடன் இணைந்த டிஜிட்டல் மீடியா பயிற்சியும் வழங்கப்படுகிறது. இது தமிழ்நாட்டில் திறமையான பத்திரிகையாளர்களை உருவாக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.