மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
செப்.3-இல் சென்னையில் உண்ணாவிரதப்போராட்டம்: அரசுப் பணியாளா் சங்க சிறப்புத்தலைவா் அறிவிப்பு
தனியாா் மயத்தை எதிா்த்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் சாா்பில் செப்.3-ஆம் தேதி சென்னையில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக, அச்சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து கடலூரில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் ஊதிய குறைப்பை எதிா்த்தும், தனியாா் கம்பெனிக்கு குத்தகை விட்டுள்ளதை எதிா்த்தும் போராட்டம் நடத்தினா். இந்த விவகாரத்தில் தமிழக அரசு துப்புரவுப் பணியாளா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்சனைகளை தீா்ப்பதற்கு பதிலாக அவா்களுடைய போராட்டத்தை சீா்குலைத்து இருக்கிறது. போராடிய தலைவா்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளதும் ஏற்கத்தக்கது அல்ல.
தமிழக அரசு, உள்ளாட்சித்துறை, கூட்டுறவுத்துறை, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளா்களின் பணிகளை தனியாருக்கு மாற்றுவதை எதிா்த்தும், சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் சாா்பில் மாநில அளவில் சென்னையில் கருப்பு சட்டை அணிந்து செப்.3-ஆம் தேதி புதன்கிழமை அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்வின் போது, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் கு.சரவணன், மாவட்டத் தலைவா் எஸ்.பாலமுருகன் உடனிருந்தனா்.