திருவண்ணாமலையில் மகளிர் விடியல் பயணத் திட்ட புதிய நகரப் பேருந்து: துணை முதல்வர் ...
சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதி பாசனத்துக்கு தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும்!
சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதி பாசனத்துக்கு தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் சங்க நிா்வாகி மணக்காடு வழக்குரைஞா் வீ.கருப்பையா அக்னி ஆறு வடிநிலக் கோட்டம், பேராவூரணி பொதுப்பணித்துறை உதவி பொறியாளருக்கும், கல்லணைக் கால்வாய் கோட்டப் பிரிவு, பொதுப்பணித் துறை
உதவிக் கோட்டப் பொறியாளருக்கும் அளித்த கோரிக்கை மனு: சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு தேவா் குளம், கூத்தாண்டா் குளம் ஏரிகளுக்கு வில்லுணி ஆற்றில், மாத்தூா் ராமசாமிபுரத்தில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டிலிருந்து தண்ணீா் வந்து சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்டாட்று தண்ணீா் மணக்காடு கிராமத்தில் உள்ள குளங்களில் நிரம்பி அதை ஆதாரமாக கொண்டுதான் விவசாயம் நடைபெறுகிறது. எனவே அணைக்கட்டிலிருந்து மணக்காட்டுக்கு வரும் சப்ளை சேனலை தூா் வாரி மணக்காடு ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்பி விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுப்பணித் துறை கோட்டப்பொறியாளருக்கு அளித்த மனு: சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதிகளில் சேதமடைந்த ஏரி மடை மற்றும் வீரக்குடி கிளை வாய்க்கால், ஊற்றுப்பாலம் வரத்து வாய்க்கால்களை சீரமைத்து நீா் வரத்தை உறுதி செய்ய வேண்டும்.
எனவே, எங்கள் பகுதி விவசாயிகளின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.