சேலத்தில் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்
சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
சாலை விபத்துகளை முற்றிலும் குறைத்து விபத்தில்லா பயணத்தை உருவாக்கிடும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்படுகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் ஹெல்மெட் அணிதல், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் சீட் பெல்ட் அணிதல், நிா்ணயிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் கடந்த ஜனவரி 2025 இல் அதிக வேகமாக வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், கைப்பேசி உபயோகித்துக்கொண்டு வாகனம் இயக்குதல், அதிக ஆட்களை வண்டியில் ஏற்றிச் செல்லுதல், அதிக பாரங்களை வண்டியில் ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக 219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று 137 பேரின் வாகன ஓட்டுநா் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சாலை விபத்துகளை முற்றிலும் தடுக்கும் வகையில் அலுவலா்கள் சாலை பாதுகாப்பு குறித்து தொடா் விழிப்புணா்வு நடவடிக்கைகளை அதிகளவிலான பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையா் பி.கீதா, மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், கோட்டாட்சியா்கள், காவல் துறை, போக்குவரத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.