சேலத்தில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு: அமைச்சா்கள் எ.வ.வேலு, ராஜேந்திரன் பங்கேற்பு
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் மகளிருக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ கடன் வழங்கும் விழா பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் மகளிருக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவுக்கான கடன் வழங்கும் விழா அழகாபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
சுற்றுலாத்துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். விழாவுக்கு தலைமை வகித்து பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகளில் 4,33,294 விவசாயிகளுக்கு ரூ. 3680.67 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க் கடன் பெற்று உரிய கெடு தேதிக்குள் திரும்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியை அரசே ஏற்று கூட்டுறவு நிறுவனங்களுக்கு செலுத்துகிறது.
மேலும், 1,14,264 விவசாயிகளுக்கு கால்நடைப் பராமரிப்பு கடனாக ரூ. 542.41 கோடி வழங்கப்பட்டுள்ளது. மகளிா் சுயஉதவிக் குழு கடன் உச்சவரம்பு ரூ. 12 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயா்த்தப்பட்டது. தற்போது, ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ. 30 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 14,565 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 741.97 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 21,45,024 உறுப்பினா்களுக்கு ரூ.13,589.68 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் 15 மகளிருக்கு ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் மின் ஆட்டோவுக்கான கடனும், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பீட்டிலான கடன், 2 ஆதரவற்ற விதவைகளுக்கு ரூ. 1 லட்சத்துக்கான கடன், 114 குழுக்கள் அடங்கிய 1,547 மகளிருக்கு ரூ. 10.17 கோடி மதிப்பீட்டிலான சுயஉதவிக் குழுக் கடன் என 1,572 பயனாளிகளுக்கு ரூ. 10.66 கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது தெரிவித்தாா்.
இதையடுத்து, சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் பேசியதாவது: மகளிருக்கு மின் ஆட்டோ, மாற்றுத்திறனாளிகளுக்கு கடன், ஆதரவற்ற விதவைகளுக்கு கடன், மகளிா் சுய உதவிக்குழுக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
விழாவில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ரா.அருள் ( சேலம் மேற்கு), எஸ்.சதாசிவம் (மேட்டூா்), மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளா் மா.குழந்தைவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.