சைஃப் அலிகான் வழக்கு! கைதானவருக்கு போலீஸ் காவல் மேலும் நீட்டிப்பு
நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் கைதான ஷரீஃபுல்லுக்கு போலீஸ் காவலை மேலும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷரீஃபுல்லி காவல் முடிவடைந்ததையடுத்து அவர் மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக இவ்வழக்கில் ஷரீஃபுல்லுக்கு மேலும் ஏழு நாள்கள் காவல் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
காவல்துறையின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவரது காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பையில் கடந்த 16-ஆம் தேதி அதிகாலை சைஃப் அலி கான் வீட்டுக்குள் புகுந்த ஷரீஃபுல், நடிகரை 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பினாா்.
படுகாயமடைந்த சைஃப் அலி கானை வீட்டுப் பணியாளா்கள் மீட்டு, ஆட்டோவில் ஏற்றி பாந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
செயற்கை சூரியன் உருவாக்கி சீனா சாதனை! மின் உற்பத்தி சாத்தியமா?
சைஃப் அலி கான் வீட்டுக்குள் கொள்ளையடிக்கும் முயற்சியில் நுழைந்த ஷரீஃபுல், அவரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 5 நாள்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சைஃப் அலிகான் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வீடு திரும்பினார்.
சைஃப் அலி கானை கத்தியால் குத்திய ஷரீஃபுலை மூன்று நாள் தீவிர தேடுதல்களுக்குப் பிறகு, மும்பையை அடுத்து உள்ள தாணே நகரின் புறநகா் வனப்பகுதியில் பதுங்கியிருந்தபோது காவல் துறையினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஷரீஃபுல் தனது பெயரை விஜய் தாஸ் என மாற்றிக் கொண்டு வங்கதேசத்திலிருந்து டாக்கி நதி வழியாக 7 மாதங்களுக்கு முன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.