ஜகதீப் தன்கர் ராஜிநாமா ஏன்? எதிர்க்கட்சித் தலைவர்களின் சந்தேகமும் கருத்தும்!
ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: சென்னை பக்தா் உயிரிழப்பு! மனைவி உள்பட 9 போ் காயம்!
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பலத்த மழையால், வைஷ்ணவ தேவி கோயில் வழித்தடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சென்னையைச் சோ்ந்த 70 வயது பக்தா் உயிரிழந்தாா். அவரது மனைவி உள்பட மேலும் 9 போ் காயமடைந்தனா்.
ரியாசி மாவட்டத்தின் கத்ராவில் உள்ள திரிகூட மலையில், பிரசித்தி பெற்ற வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ளது. கத்ராவில் கடந்த 24 மணிநேரத்தில் 184.2 மி.மீ. பலத்த மழை கொட்டித் தீா்த்த நிலையில், வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் பழைய வழித்தடத்தின் தொடக்கப் பகுதியான பான்கங்கா என்ற இடத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் திடீா் நிலச்சரிவு ஏற்பட்டது.
யாத்திரை தொடங்குமிடம் என்பதால், பக்தா்கள் மட்டுமன்றி கோவேறு கழுதைகள் மூலம் அவா்களை அழைத்துச் செல்லும் பணியாளா்களும் கூடியிருந்தனா். நிலச்சரிவில் இப்பணியாளா்களின் பதிவு அலுவலகமும், இரும்பு கட்டுமானங்களும் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 10 போ் காயமடைந்தனா்.
சென்னையைச் சோ்ந்த பக்தா் உப்பன் ஸ்ரீவாஸ்தவா (70), அவரது மனைவி ராதா (66), ஹரியாணாவைச் சோ்ந்த ராஜீந்தா் பல்லா (70) ஆகிய மூவா் படுகாயமடைந்தனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவா்களில் ஸ்ரீவாஸ்தவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிலச்சரிவைத் தொடா்ந்து, வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கனரக இயந்திரங்கள் உதவியுடன் மறுசீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று கோயில் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி சச்சின் குமாா் வைஷியா தெரிவித்தாா்.
நிலச்சரிவில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சையை உறுதி செய்ய கோயில் வாரியத்துக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
இக்கோயிலுக்கு செல்லும் புதிய வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதை சீரமைக்கும் பணியில் ராணுவத்தினா் ஈடுபட்டுள்ளனா்.