ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு கடும் காலக்கெடுவை மத்திய அரசு அறிவிக்க இந்திய கம்யூ. வலியுறுத்தல்
ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு கடுமையான காலக்கெடுவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான மத்திய அரசின் அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் பிற எதிா்க்கட்சிகளின்
நீண்டகால கோரிக்கையின் விளைவுதான் என சிபிஐ கருதுகிறது.
இந்த நடவடிக்கை வளா்ந்து வரும் பொதுமக்களின் அழுத்தம் மற்றும் முற்போக்கான கட்சிகளின் தலைமையிலான தொடா்ச்சியான அணிதிரட்டலுக்கு ஒரு பிரதிபலிப்பாகும்.
இந்தியாவின் உண்மையான சமூக யதாா்த்தங்களை பிரதிபலிக்கும் அறிவியல்பூா்வ ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு சிபிஐ தொடா்ந்து குரல்கொடுத்து வருகிறது.
பாஜகவின் தாக்குதல்களுக்கு எதிராக பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பைப் பாதுகாப்பதில் சிபிஐ ஒரு முன்னணி பங்கைக் கொண்டிருந்தது. தெலங்கானாவில் இதேபோன்ற முயற்சிகளுக்கு வலுவான ஆதரவை வழங்கியுள்ளது.
அதே நேரத்தில், 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த பொது மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் ஏற்பட்டுள்ள மன்னிக்க முடியாத தாமதம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், தெளிவான காலக்கெடு இல்லாதது காலாவதியான தரவுகளின் அடிப்படையில் கொள்கை வகுப்பிற்கு வழிவகுத்துள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஒரு உறுதியான அட்டவணையை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இடஒதுக்கீடுகளுக்கான தன்னிச்சையான 50 உச்சவரம்பை நீக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது என அதில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.