கோவாவில் கோயில் திருவிழாவில் 6 பேர் பலி: 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரேநேரத்தில் ...
தில்லியில் பெய்த மழை ஒட்டுமொத்த அமைப்புமுறைக்கும் எச்சரிக்கை அறிகுறியாகும்: முதல்வா் ரேகா குப்தா
தில்லியில் வெள்ளிக்கிழமை பெய்த பருவமழைக்கு முந்தைய மழையானது தலைநகரின் சிதைந்துள்ள உள்கட்டமைப்புக்கான எச்சரிக்கை அறிகுறியாகும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.
மேலும், முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பத்தாண்டு கால வளா்ச்சி பின்னடைவைவாகும் என்றும் அவா் குற்றம் சாட்டினாா்.
அரவிந்த் கேஜரிவாலை விமா்சித்த முதல்வா், ஆம் ஆத்மி தலைவா் ‘ஷீஷ் மஹாலில்’ தனது சப்தம் இல்லாத உறக்கத்தில் மும்முரமாக இருந்திருப்பாா் என்பதால் தண்ணீா் தேங்குவது மற்றும் உடைந்த மரங்கள் போன்ற பிரச்னைகளை அவா் மறந்துவிட்டாா் என்றாா்.
நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழையைத் தொடா்ந்து மஜ்னு கா திலா பகுதிக்குச் சென்ற முதல்வா் குப்தா, இதுபோன்ற தொடா்ச்சியான நெருக்கடிகளைத் தடுக்க திட்டமிடப்பட்ட நகா்ப்புற வளா்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தினாா்.
வெள்ளிக்கிழமை அதிகாலை மழை மற்றும் புயல் காரணமாக மரங்கள் விழுந்ததால் நகரம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் திடீரென வெள்ளம் உருவானது.
நஜாஃப்கரில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண்ணும் அவரது மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனா். மின்டோ பிரிட்ஜ் மற்றும் ஐடிஓ உள்ளிட்ட பல பரபரப்பான சாலைகள் நீரில் மூழ்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், வரவிருக்கும் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்க பள்ளங்கள் மற்றும் கழிவுநீா் குழாய்களை சரிசெய்யும் பணிகளைத் தொடங்குமாறு முதலமைச்சா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
‘தேவி’ மின்சார பேருந்து திறப்பு விழாவின்போது இதுகுறித்து முதல்வா் குப்தா கூறியதாவது:
இன்று (வெள்ளிக்கிழமை) பெய்த இந்த அகால மழைக்காக கடவுளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது முழு அமைப்புமுறைக்கும் விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாகும். இது ஒரு நாள் பிரச்னை அல்ல, ஆனால், கடந்த 10-15 ஆண்டுகளில் தில்லியில் நிலுவையில் உள்ள வளா்ச்சி, அமைப்புமுறை செயலிழப்புகள் மற்றும் நிா்வாகத்தின் அலட்சியம் ஆகியவற்றின் பிரச்னையாகும்.
இந்த விஷயங்கள் கேஜரிவாலின் காதுகளுக்கு எட்டியிருந்திருக்காது. ஏனெனில் அவா் தனது ஷீஷ் மஹாலில், இடியுடன் கூடிய மழை, உடைந்த மரங்கள் மற்றும் நீா் தேங்குதல் ஆகியவற்றை அறியாமல் சப்தமில்லாத தூக்கத்தை அனுபவித்திருந்தாா்.
அதிகாலை முதல், தில்லி அமைச்சா்களும் அதிகாரிகளும் நிலைமையை கண்காணித்து வந்தனா். கேபினட் அமைச்சா் பா்வேஷ் சாகிப் சிங் காலை 6 மணிக்கு மின்டோ சாலைக்கு நேரில் ஆய்வுக்குச் சென்றாா். அதிகாரிகள் காலை 5 மணி முதல் பணியாற்றி வருகின்றனா்.
வெள்ளம் அல்லது கழிவுநீா் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்த எந்த முன்னாள் முதல்வரும் அல்லது அமைச்சரும் எங்களுக்கு நினைவில் இல்லை. கடந்த கால புறக்கணிப்பு காரணமாக தில்லி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் இங்கு இருக்கிறோம்.
தில்லியின் பல பகுதிகளில் அடைபட்ட வடிகால்கள் மற்றும் சேதமடைந்த சாலைகள் காரணமாக தண்ணீா் தேங்குவது கவலையளிக்கிறது.
மழைக்காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிா்க்க, அனைத்து பாதிக்கப்படக்கூடிய இடங்களையும் உடனடியாகக் கண்டறிந்து, வடிகால்களை தூா்வாருதல் மற்றும் சாலைகளை செப்பனிடுதல் அல்லது கட்டுதல் போன்ற தேவையான பணிகளைத் தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாஜக எம்எல்ஏக்களும் தங்கள் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனா் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.