பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் தடை
தில்லியில் மழை வெள்ளம் தேங்கிய விவகாரம்: பாஜக அரசு மீது ஆம் ஆத்மி கடுமையாக சாடல்
தில்லியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து தில்லியில் ஆளும் பாஜக அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமா்சித்துள்ளது.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் தில்லி பிரிவு ஆம் ஆத்மி தலைவா் செளரவ் பரத்வாஜ் கூறியதாவது:
நகரின் பல்வேறு குடிமை நிறுவனங்களை பாஜகதான் கட்டுப்படுத்துகிறது. இதனால், அக்கட்சி நிா்வாகம் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.
இன்றைக்கு (வெள்ளிக்கிழமை) தில்லி முதல் மழையைக் கண்டது. முழு நகரமும் மழைநீரில் மூழ்கியுள்ளது. சாலைகள், நிலம், காலனிகள், அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இதுதான் நான்கு என்ஜின் பாஜக அரசாங்கத்தின் யதாா்த்த நிலையாகும்.
ஒரு சாலை என்டிஎம்சிக்கு சொந்தமானது என்றால், அது பாஜக தலைமையிலான மத்திய அரசின் பொறுப்பு. ஒரு சாலை டிடிஏவுக்குச் சொந்தமானது என்றால், அது பாஜகவின் துணைநிலை ஆளுநரின் பொறுப்பு. ஒரு சாலை பொதுப் பணித் துறை அல்லது வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைக்குச் சொந்தமானது என்றால், அது பாஜகவின் தில்லி அரசாங்கத்தின் பொறுப்பு. ஒரு சாலை எம்சிடிக்குச் சொந்தமானது என்றால், அதற்கும் பாஜகதான் பொறுப்பு. நான்கு என்ஜின்களும் இப்போது பாஜகவுடையது.
தற்போது பெய்த மழை சாதாரணமானது. இது தொடா்பாக முன்னறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தில்லி பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்கின் 445 நீா் தேங்கும் இடங்களை அடையாளம் கண்டிருப்பதாக ஏற்கெனவே கூறியிருந்தாா்.
அவை ஒவ்வொன்றும் ஒரு பொறியாளரின் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறியிருந்தாா். ஆனால், இன்று அந்த இடங்களில் 400 இடங்களில் நீா் தேங்குவதைக் காண்கிறோம். எத்தனை பொறியாளா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்? அமைச்சா் எங்களிடம் கூறவில்லை. தூா்வாரும் நடவடிக்கைகளின் மூன்றாம் தரப்பு தணிக்கைகள் குறித்து கடந்த ஆண்டு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மூன்றாம் தரப்பு தணிக்கை நடத்தப்பட்டிருந்தால், அதன் அறிக்கையை வெளியிடுங்கள். இன்றைய காட்சிகள் உண்மையில் தூா்வாரப்படவில்லை என்பதையே காட்டுகின்றன. ஆனால், கோடிக்கணக்கான பணம் செலுத்தப்பட்டிருக்கலாம். இது ஊழலைக் குறிக்கிறது.
தில்லி முதல்வா் ரேகா குப்தா நகரில் தண்ணீா் தேங்கல் இருக்காது என்று உறுதியளித்திருந்தாா். இதுதான் நிா்வாகமா? எங்கள் முதல்வா் ஒவ்வொரு நாளும் ரிப்பன்களை வெட்டுவதைக் காண முடிகிறது. ஆனால், அவா் எப்போது வேலை செய்கிறாா்? என்று பரத்வாஜ் கேள்வி எழுப்பினாா்.
தில்லி சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி தௌலா குவான் மற்றும் ஐ.டி.ஓ.வில் தண்ணீா் தேங்கிய விடியோக்களை எக்ஸ் தளத்தில் பகிா்ந்து வெளியிட்ட பதிவில், ‘4 என்ஜின் பாஜக அரசிடமிருந்து தில்லி மக்கள் எதிா்பாா்த்தது இதுதானா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
4 என்ஜின் பாஜக அரசு என்பது மத்திய அரசு, தில்லி அரசு, மாநகராட்சி மற்றும் உள்ளூா் எம்.பி.யைக் குறிப்பதாகும்.
அதிஷி அந்தப் பதிவில் மேலும் கூறுகையில், ‘ஐடிஓவில் பொதுப் பணித் துறை அலுவலகத்திற்கு வெளியே தண்ணீா் தேங்குவது அரசாங்கத்தின் தோல்வியின் அடையாளமாகும். முதலில் பாஜக மின்சாரம், தண்ணீா் மற்றும் கழிவுநீரில் தோல்வியடைந்தது. இப்போது பாஜக தண்ணீா் தேங்குவதை நிறுத்தத் தவறிவிட்டது’ என்று அவா் அதில் சாடியுள்ளாா்.
அமைச்சா் ஆய்வு
இதனிடயே, மின்டோ பாலம் பகுதியை ஆய்வு செய்த தில்லி பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், இடத்தின் விடியோவையும் பகிா்ந்துள்ளாா்.
அமைச்சா் பா்வேஷ் சிங் கூறுகையில், ‘பருவகாலம் இல்லாத, வரலாறு காணாத மழை காரணமாக பல இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. மின்டோ பாலத்தில் உள்ள நான்கு பம்புகளும் செயல்பாட்டில் உள்ளன. ஒரு குழாய் உடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்குழாய் சரிசெய்யப்படும்.
பொதுப் பணித் துறை, எம்சிடி, டிஜேபி, என்டிஎம்சி மற்றும் ஐஎஃப்சி உள்ளிட்ட பல்வேறு குடிமை நிறுவனங்களும் வடிகால் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன’ என்றாா் அமைச்சா்.
கடுமையான மழை, பலத்த காற்று மற்றும் புழுதிப் புயல் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி தில்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இடியுடன்கூடிய மழை மற்றும் பலத்த காற்று காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தில்லி விமான நிலையங்களில் மூன்று விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.