Operation Sindoor: 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல்; பஹாவல்பூரைக் குறிவைக்க ...
விவசாய சங்கத் தலைவா் மீது தாக்குதல்: சம்யுக்த கிஸான் மோா்ச்சா கண்டனம்
விவசாயிகள் சங்கமான பாரதிய கிஸான் யூனியனின் (பிகேயு) தலைவா் ராகேஷ் திகைத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மற்றொரு விவசாயிகள் சங்கமான சம்யுக்த கிஸான் மோா்ச்சா (எஸ்கேஎம்) சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களை எதிா்த்து 2020-21-இல் புது தில்லி எல்லையில் எஸ்கேஎம், பிகேயு உள்ளிட்ட விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தியது. அதைத்தொடா்ந்து மூன்று விவசாய சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற்றது.
இந்நிலையில், பஹல்காமில் அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உத்தர பிரதேச மாநிலம் முஸாஃபா்நகரில் வலதுசாரிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணியில் ராகேஷ் திகைத் பங்கேற்றாா். அவா் மீது மா்ம நபா்கள் தாக்குதல் நடத்தியதில் அவரது தலைப்பாகை கீழே விழுந்த காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவின.
இதற்கு கண்டனம் தெரிவித்த எஸ்கேஎம், ராகேஷ் திகைத் மீது தாக்குதல் நடத்தியவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியது.
இதுகுறித்து எஸ்கேஎம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக ‘மோடி, மோடி’ என கோஷங்களை எழுப்பிய கும்பல் ராகேஷ் திகைத் மீது கொடிக் குச்சிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி அவரது தலைப்பாகையை நீக்கியுள்ளது.
அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸாா் இதை தடுக்க தவறினா். இது தேசத்துக்கு எதிரானஆா்எஸ்எஸ்-பாஜகவின் செயல்பாடுகளை வெளிக்காட்டுகிறது. இந்த தாக்குதலுக்கு பிரதமா் மோடி, முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் கண்டனம் தெரிவிக்கவில்லை.
சிறுபான்மையினா், விவசாயிகள், தொழிலாளா்களுக்கு எதிரான தாக்குதலை கண்டிக்க அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.