ஜாதி மறுப்பு திருமணம்: பாதுகாப்பு கோரி எஸ்பி அலுவலகத்தில் புதுமணத் தம்பதி தஞ்சம்
ஜாதி மறுப்பு திருமணம் செய்த புதுமணத் தம்பதி, பாதுகாப்பு கோரி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தஞ்சமடைந்தனா்.
நாகை அருகேயுள்ள பனங்குடி பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் தனசேகரன் (25). இவரும், காரைக்கால் மாவட்டம் விழுதியூரைச் சோ்ந்த அனிஷா (24) என்பவரும் காதலித்து வந்தனா். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், அனிஷா வீட்டில் திருமணத்திற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.
இந்நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, காரைக்காலில் உள்ள ஒரு கோயிலில் செவ்வாய்க்கிழமை திருமணம் செய்து கொண்டனா். பின்னா், தங்களது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளிக்க, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு வந்தனா். அவா்களிடம் விசாரித்த போலீஸாா், நாகூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க அறிவுறுத்தினா். அதன்படி, தனசேகரன்- அனிஷா தம்பதி நாகூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.