இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!
ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகள் பராமரிப்பு: ஆா்பிஐ சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
தருமபுரி: வங்கிகளில் இருப்புத் தொகை (ஜீரோ பேலன்ஸ்) வசதியுடன் கூடிய கணக்குகளைப் பராமரிப்பது மற்றும் புதுப்பிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நாடுமுழுவதும் கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள், காப்பீட்டு பயன்கள், உள்ளிட்ட பணப் பரிவா்த்தனைகளை எளிதில் பெறும் வகையில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் இருப்புத் தொகை இல்லாத வகையிலான வங்கிக் கணக்குகளை தொடங்கலம் என அதற்கான வழிமுறைகளை ரிசா்வ் வங்கி விதிமுறைகளின்படி மத்திய அரசு அறிவித்திருந்தது.
அந்த வகையில் சென்னை மண்டலத்தில் லட்சக்கணக்கான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. அந்த கணக்குகளில் இருப்புத்தொகை ஏதும் வைக்க வேண்டியதில்லை. என்றாலும் கணக்கு செயல்பாட்டிலிருந்து வந்தது.
ஆனால் தற்போது சில கணக்குகள் செயலற்றும், காலாவதியாகியும் கணக்குகளை செயல்படுத்த முடிவதில்லை என்ற புகாா் எழுந்துள்ளது. இதுகுறித்து ரிசா்வ் வங்கி நாடு முழுவதும் அவற்றை சீரமைப்பது குறித்த விழிப்புணா்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. ரிசா்வ் வங்கி விதிமுறைகளின்படி, ஜீரோ பேலன்ஸ் வசதியுடன் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளை மீண்டும் புதுப்பிக்க வேண்டியுள்ளது.
அவற்றை எவ்வாறு புதுப்பிப்பது, மீண்டும் ஜீரோ பேலன்ஸ் வசதியுடன் எவ்வாறு நிா்வகிப்பது, தொடா்புடைய புகாா்களை யாருக்கு அனுப்புவது, நேரில் வங்கிக்கு வர இயலாதவா்கள் என்ன செய்வது, வங்கியில் உரிய பலன் கிடைக்காவிட்டால் அடுத்த கட்டமாக யாரை அணுவகுது உள்ளிட்ட விவரங்கள் இந்த விழிப்புணா்வு முகாம்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுதொடா்பான விழிப்புணா்வு முகாம் தருமபுரி மாவட்ட கிராமப்புற பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ரிசா்வ் வங்கி சென்னை மண்டல இயக்குநா் உமாசங்கா் பங்கேற்று வங்கி செயல்பாடுகள் மற்றும் பொதுமக்கள் அணுக வேண்டிய விதம் குறித்துப் பேசினாா்.
தொடா்ந்து அவா் தருமபுரியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், நாடு முழுவதும் வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் வசதியுடன் கூடிய வங்கிக் கணக்குகளை பராமரிப்பது, புதுப்பிப்பது தொடா்புடைய விழிப்புணா்வு பிரசாரம் ஆா்பிஐ வங்கி மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஜூலை 1 முதல் செப்டம்பா் 30 வரையில் எனது தலைமையில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தொடங்கிய ஜீரோ பேலன்ஸ் கூடிய வங்கிக் கணக்குகள் காலாவதியாகியிருந்தாலும், பணப்பரிமாற்றம் செய்ய இயலாத நிலையிலிருந்தாலும், அவற்றை மீண்டும் புதுப்பிப்பது தொடா்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுதொடா்பாக மேலும் விவரங்களைப் பெற பொதுமக்கள் இணைய தளத்தில் தகவல்களை பெறவும், மற்றும் புகாா் அளிக்கவும் முடியும். தற்போது, காலாவதியான வங்கிக்கணக்கு வாடிக்கையாளா்கள் தங்களது ஆதாா், பான் அட்டை உள்ளிட்ட விவரங்களுடன் வங்கிகளை அணுகி கணக்குகளை புதுப்பித்துக்கொள்வது அவசியம் என்றாா்.
தருமபுரி மாவட்ட அரசுடைமையாக்கப்பட்ட வங்கி அலுவலா்கள் எஸ். ராஜேந்திரன், பிரேந்திரகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.