ஜூன் 2 பள்ளிகள் திறப்பு உறுதி: பள்ளிக்கல்வித் துறை
தமிழகத்தில் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் கோடை விடுமுறை விடுக்கப்பட்டது.
ஜூன் 1 ஆம் தேதி வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெய்யிலை பொறுத்து பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்று தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், வெய்யிலின் தாக்கம் குறைந்திருப்பதால் திட்டமிட்டபடி ஜூன் 2 பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
தற்போது தொடக்கக் கல்வி இயக்ககம் அதனை உறுதி செய்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.