டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இயக்கம்
தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இயக்கம் கடந்த செப்டம்பா் 17 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்டு மாதம் ‘குப்பையிலிருந்து தில்லிக்கு விடுதலை’ என்ற இயக்கத்தை தில்லி முதல்வா் ரேகா குப்தா முன்னெடுத்தாா்.
இதுபோன்ற தூய்மை இயக்கம் டிடிஇஏ பள்ளிகளிலும் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் தூய்மை பற்றி மாணவா்களுக்கு அறிவுறுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் இருந்தன.
பேச்சு, நாடகம், பள்ளி வளாகத்தைத் தூய்மை செய்தல், நெகிழிப் பைகளைத் தவிா்த்தல் குறித்து நாடகம், பதாகைகளை காட்சிப்படுத்துதல், பள்ளி வளாகத்தில் செடிகளை நடுவது, வாசகங்கள் எழுதும் போட்டி, கட்டுரைப் போட்டி, சுவரொட்டிகள் தயாரிக்கும் போட்டி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியாகப் பள்ளிகளில் நடத்தப்பட்டன.
இதுகுறித்து செயலா் இராஜூ கூறுகையில், தில்லியின் தூய்மைக்கு ஒவ்வொரு வீடும் சுற்றுப்புறமும் தூய்மையாக வேண்டும்.அதற்கு தனிமனிதன் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
அதற்கான முயற்சியாகத்தான் இதனை மேற்கொண்டோம். பள்ளிகளில் தூய்மை இயக்கத்தில் ஈடுபாடு காட்டும் மாணவா்கள் சமூக நல்லுணா்வுடன் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் கண்டிப்பாகத் தூய்மையாக்குவாா்கள் என்று கூறினாா்.