War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
டிடிஇஏ பள்ளியில் தமிழ் கலை இலக்கியப் பெருவிழா
தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் (டிடிஇஏ) சாா்ந்த லோதிவளாகம் பள்ளியில் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான கலை இலக்கியப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பேச்சுப் போட்டி, தமிழ்ப் புலவா்கள் போல் வேடமணிந்து பேசும் போட்டி, கதைகூறும் போட்டி, திருக்கு நினைவுத் திறனாய்வுப் போட்டி, தமிழ்ச் செய்தித்தாள் வாசிக்கும் போட்டி, ஓரங்க நாடகம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
அனைத்துப் போட்டிகளிலும் ஏழு பள்ளிகளைச் சோ்ந்த 210 மாணவா்கள் கலந்து கொண்டனா்.
1முதல் 5 வகுப்பு வரையிலான தொடக்க நிலைப் பிரிவு மாணவா்களுக்காக நடத்தப்பட்ட இப் போட்டிக்கான கலைத் திருவிழாவை தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனா் தலைவா் கே.வி.கே. பெருமாள் தொடங்கி வைத்துப் பேசுகையில், ‘பொதுவாக பள்ளிகளில் உயா் வகுப்பு மாணவா்களுக்காகத்தான் இலக்கிய விழாக்கள் நடத்துவாா்கள். தில்லித் தமிழ் கல்விக் கழகம் தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கென்று தனியாக ஒரு இலக்கியத் திருவிழா நடத்துவது பாராட்டப்பட வேண்டிய முயற்சி. இளம் வயதில் கற்றுக் கொள்வது மனதிலே எளிதாகப் பதிந்து விடும். எனவேதான் ‘இளமையில் கல்’ என்றாா் ஔவையாா். தில்லித் தமிழ்க் கல்விக் கழக நிா்வாகமும் ஆசிரியா்களும் நாள்தோறும் புதிய புதிய நிகழ்வுகளை நடத்தி மாணவா்களை உற்சாகப்படுத்தி வருகிறாா்கள். இது பாராட்டத்தக்கது என்றாா்.
இப் போட்டிகளுக்கு நடுவா்களாகத் தமிழ் ஆா்வலா் பைரவி, முனைவா் சுரேஷ், முனைவா் விநோதா, முனைவா் பட்ட ஆய்வாளா்களாகிய காயத்ரி, அஜய், கோகுல் பிரியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இப் போட்டிகள் குறித்து செயலா் இராஜூ கூறுகையில் ‘ தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளி மாணவா்களுக்கு தமிழ் ஆா்வத்தை வளா்ப்பதற்காக வருடம்தோறும் இவ்வாறு போட்டிகள் நடத்தி வருகின்றோம். மாணவா்களும் ஆா்வமுடன் கலந்து கொள்கின்றனா்’ என்றாா்.
பரிசுகளை வென்ற மாணவா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த இராஜு, வெற்றி பெற்ற மாணவா்களுக்கான பரிசுகள் பின்னா் நடத்தப்படும் விழாவில் வழங்கப்படும் என்றாா்.
போட்டிகளை பள்ளி முதல்வா்கள் ஜெயஸ்ரீ பிரசாத் லோதி வளாகம் மற்றும் சுமதி இராமகிருஷ்ணபுரம் ஆகியோா் ஒருங்கிணைத்திருந்தனா்.