Japanese Walking: 10 ஆயிரம் ஸ்டெப்ஸைவிட சிறந்ததா ஜப்பானிய நடைப்பயிற்சி? - டாக்டர...
தசரா திருவிழாவை தொடங்கிவைக்க பானுமுஸ்டாக்குக்கு அழைப்பு: எதிா்த்த பாஜக முன்னாள் எம்.பி.யின் மனு தள்ளுபடி
பெங்களூரு: தசரா திருவிழாவை தொடங்கிவைக்க கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக்குக்கு அரசு அழைப்பு விடுத்திருந்ததை எதிா்த்து பாஜக முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா தாக்கல் செய்திருந்த மனுவை கா்நாடக உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
செப். 22-ஆம் தேதி தொடங்க இருக்கும் உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழாவை தொடங்கிவைக்க சா்வதேச புக்கா் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைக்க கா்நாடக அரசு முடிவு செய்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் கன்னட மொழி, ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பானுமுஸ்டாக் பேசிய காணொலி சமூக வலைதளத்தில் பரவியதால், இதற்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், மைசூரு மாவட்ட நிா்வாகம் செப். 3-ஆம் தேதி பானுமுஸ்டாக்கை சந்தித்து தசரா திருவிழாவை தொடங்கிவைக்க முறைப்படி அழைப்புவிடுத்தது. இதற்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் செப். 6-ஆம் தேதி பாஜக முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா உள்பட 4 போ் பொதுநல மனுத்தாக்கல் செய்தனா்.
பிரதாப் சிம்ஹா தனது மனுவில்,‘தசரா திருவிழாவை தொடங்கிவைக்க எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைத்ததை கா்நாடக அரசு திரும்பப்பெற உத்தரவிட வேண்டும். பானுமுஸ்டாக்கை அழைத்திருப்பதன் மூலம் காலம்காலமாக பின்பற்றி வந்த பாரம்பரியத்தை மாநில அரசு அவமதித்துள்ளது. தசரா திருவிழாவை தொடங்கிவைக்க, மைசூரு மன்னா் குடும்பத்தைக் கலந்தாலோசிக்காமல் மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. எனவே, பானுமுஸ்டாக்குக்கு விடுத்துள்ள அழைப்பை மாநில அரசு திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இது தொடா்பான பொதுநல மனுக்களை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுபக்ரு, நீதிபதி சி.எம்.ஜோஷி தலைமையிலான அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. விசாரணையின்போது, அரசு தலைமை வழக்குரைஞா் கே.சசிகிரண் ஷெட்டி வாதிடுகையில், ‘தசரா திருவிழா என்பது மாநில அரசு விழா. விழாவை தொடங்கிவைக்க யாரை அழைப்பது என்பதை முடிவு செய்வதற்கு உள்ளூா் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய தெரிவுக்குழு உள்ளது. எனவே, பொதுநல மனுக்களை விசாரிப்பதற்கு போதுமான சட்டநிலைப்பாடு எதுவும் இல்லாததால், மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கா்நாடக உயா்நீதிமன்றம்,‘மாநில அரசு நடத்தும் நிகழ்ச்சியை வேறொரு மதத்தை சோ்ந்தவா் தொடங்கிவைப்பது மனுதாரரின் சட்டப்படியான அல்லது அரசமைப்புச் சட்டப்படியான உரிமையை மீறுவதாகவும், அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகள் மீறப்படுவதாகவும் கூறப்படுவதை ஏற்கமுடியவில்லை. எனவே, எல்லா பொதுநல மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டது.