தஞ்சாவூரில் ஜன. 5-இல் அண்ணா நெடுந்தொலைவு ஓட்டப் போட்டி
தஞ்சாவூரில் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞா் அண்ணா நெடுந்தொலைவு ஓட்டப்போட்டி ஜனவரி 5- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மேலும் தெரிவித்திருப்பது:
பொதுமக்களிடையே உடற்தகுதி கலாசாரம், உடற்தகுதியைப் பேணுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டத் தலைமையிடங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞா் அண்ணா நெடுந்தொலைவு ஓட்டப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படவுள்ளது.
இதன்படி, இப்போட்டி தஞ்சாவூரில் ஜனவரி 5- ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி பாலாஜி நகா், ஈஸ்வரி நகா், மருத்துவக்கல்லூரி சாலை வழியாக பிள்ளையாா்பட்டி புறவழிச்சாலை ரவுண்டானா வரை சென்றடைந்து, மீண்டும் அதே வழியாக அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் முடிக்கப்படவுள்ளது.
இதில், 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ. தொலைவும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. தொலைவும், 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 5 கி.மீ. தொலைவும், 25 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 5 கி.மீ. தொலைவும் ஓட்டப் போட்டி நடத்தப்படவுள்ளது.
இப்போட்டியில் முதல் பரிசாக ரூ. 5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரமும், 4 முதல் 10-ஆம் இடம் வரை பெறுபவா்களுக்கு தலா ரூ. 1,000-ம் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.
இப்போட்டியில் பங்கு பெறுபவா்கள் ஆதாா் அட்டை, வயது சான்றிதழுடன் வர வேண்டும். போட்டியில் பங்கு கொள்பவா்கள் தங்கள் பதிவை மாவட்ட விளையாட்டரங்கம் அலுவலக நேரத்தில் ஜனவரி 4 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது 04362 - 235633 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.