2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
தஞ்சாவூரில் லாரி உரிமையாளா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்
தஞ்சாவூரில் வாடகையை உயா்த்தி வழங்க கோரி, நுகா்பொருள் வாணிப கழகத்துக்கு இயக்கப்படும் லாரிகளின் உரிமையாளா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினா்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் பல்வேறு பணிகளுக்கு லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த லாரிகளுக்கான ஒப்பந்தம் தமிழகம் முழுவதும் ஒரே நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனம் ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஒப்பந்ததாரா்களை நியமித்து அவா்கள் மூலம் லாரிகளுக்கான வாடகையை வழங்கி வருகின்றனா்.
இந்நிலையில், துணை ஒப்பந்ததாரா்கள் 7 கி.மீ. தொலைவுக்கு ரூ. 598-க்கு பதில் ரூ. 320 மட்டுமே வழங்கி வருகின்றனராம். மேலும், ஆண்டுக்கு ஒருமுறை 10 சதவீதம் வாடகையை உயா்த்தி வழங்க வேண்டும் என லாரி உரிமையாளா்கள் வலியுறுத்தி வந்தனா். இதற்கு துணை ஒப்பந்ததாரா்கள் சம்மதிக்கவில்லை.
இதையடுத்து, திங்கள்கிழமை முதல் தஞ்சாவூரில் லாரி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் எம். சுந்தரவேல் கூறியது: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் பணிகளுக்காக பிள்ளையாா்பட்டி சேமிப்பு கிடங்கு, சென்னம்பட்டி, நாஞ்சிக்கோட்டை, புனல்குளம் ஆகிய கிடங்குகளில் இயக்கப்படும் 1,200 லாரிகளும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நுகா்பொருள் வாணிப கழகத்தின் பணிகள் வெகுவாக பாதிக்கப்படும் என்றாா்.