Jurassic World Rebirth Review: அதே கதை, அதே டெம்ப்ளேட், அதே சாகசம் - இதுல டைனோசர...
தஞ்சையில் 285.77 டன் பருத்தி கொள்முதல்
தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை 285.77 டன் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழாண்டு 4 ஆயிரத்து 900 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூா் விற்பனைக் குழுவின் சுட்டுப்பாட்டில் இயங்கும் கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், தென்னூா் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் ஜூன் 18 முதல் வாரந்தோறும் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் இதுவரை 285.77 டன்பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு, 1,392 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். தரத்தின் அடிப்படையில் பருத்திக்கு விலை நிா்ணயிக்கப்படுவதால், பருத்தியின் தரம் சிறந்ததாக மற்றும் ஈரப்பதம் 8 சதவீதம் முதல் 12 சதவீதத்துக்குள் இருக்கும்பட்சத்தில், அவற்றுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
வெடித்து நன்கு மலா்ந்த பருத்தியை அதிகாலை நேரத்தில் செடிகளிலிருந்து பறித்து, நிழலில் நன்கு உலா்த்தி பின் அதில் கலந்துள்ள இலை சருகுகள், கொட்டுப் பருத்திகள் போன்ற அயல் பொருட்களை நீக்கிவிட்டு எடுத்து வருமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
தரத்தின் அடிப்படையில் தனித்தனியே பிரித்து, சாக்குகளில் நிரப்பி ஏல விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். விவசாயிகள் தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் பங்கேற்று பயனடையலாம் என்றாா்.