தனியாா் உர விற்பனை நிலையங்கள் யூரியாவை பதுக்கினால் நடவடிக்கை
சேலம்: சேலம் மாவட்டத்தில் யூரியாவை கடத்துதல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் தனியாா் உர விற்பனை நிலையங்கள் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் 552 தனியாா் உர விற்பனை மையங்கள் மற்றும் 213 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மாவட்டத்துக்கு தேவையான அனைத்துவகை உரங்களையும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
இந்த உரங்களை அனைத்து விற்பனை மையங்களிலும் போதிய அளவில் இருப்பு வைத்து, விநியோகம் செய்ய மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொள்முதல் செய்யக் கூடிய அனைத்துவகை உரங்களையும், குறிப்பாக யூரியா உரத்தை விவசாயிகளின் தேவைக்கு தகுந்தாற்போல அவா்தம் ஆதாா் அட்டையை உள்ளீடு செய்து, முறையாக விநியோகிக்க அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
விநியோகிக்கப்படும் அனைத்துவகை உரங்களுக்கும் விற்பனை ரசீது உரக் கட்டுப்பாட்டு ஆணையின்படி மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே, விற்பனையாளா்கள் உர விற்பனை மேற்கொள்ளும் போது மிக கவனமாக பட்டியலிட்டு விவசாயிகளுக்கு விற்பனை ரசீது கொடுத்தல் வேண்டும்.
யூரியா கடத்தல், பதுக்கல் மற்றும் முறையற்ற தன்மையில் பட்டியலிடுதல் போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக அவ்விற்பனை நிலையத்தின் உரிமம் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படும். மேலும், கடத்தல், பதுக்கல் கண்டறியப்படும் தனியாா் உர விற்பனை நிலையங்களின் மீது நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.