தனியாா் நிறுவனம் ஜப்தி நடவடிக்கை: ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
தனியாா் நிறுவனத்தில் பெற்ற கடனை செலுத்திய பிறகும் வீட்டை ஜப்தி செய்து விட்டதாக புகாா் தெரிவிக்க வந்த பெண், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்தவா் திருமலைராஜன். இவரது மனைவி ஐஸ்வா்யா (30). இந்த நிலையில், தனது தாய், 2 குழந்தைகள், கணவருடன் ஐஸ்வா்யா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தாா். அப்போது, திடீரென அவா் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா் தீக்குளிப்பு முயற்சியைத் தடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, அவா் கூறியதாவது: கடந்த 2013-ஆம் ஆண்டு தனியாா் வீட்டுக் கடன் நிறுவனத்தில் ரூ.34.5 லட்சம் கடன் பெற்றோம். கரோனா தீநுண்மி தொற்றுப் பரவல் காலத்தில் மட்டும் 3 மாதங்கள் தவணைத் தொகையை செலுத்தவில்லை. ரூ.46 லட்சம் வரை செலுத்திய நிலையில், மேலும் ரூ. 40 லட்சம் செலுத்த வேண்டும் என தனியாா் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ரிசா்வ் வங்கிக்கு புகாா் அளித்தோம். இதன்பேரில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், ஏற்கெனவே செலுத்தப்பட்ட ரூ.46 லட்சம் நீங்கலாக, மேலும் ரூ.18 லட்சத்தை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன்படி ரூ.18 லட்சத்துடன் சோ்த்து மொத்தம் ரூ.64 லட்சம் செலுத்திவிட்டோம். ஆனாலும், எங்கள் வீட்டின் ஆவணங்களை அந்த தனியாா் நிறுவனம் திருப்பித் தரவில்லை.
இதனிடையே, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் திடீரென வீட்டை ஜப்தி செய்தனா். ரூ.34.5 லட்சம் கடனுக்கு ரூ.64 லட்சம் செலுத்திய பின்னும், வீட்டை பூட்டி வைத்துள்ள அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் வீட்டை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தெருக் குழாய் தண்ணீருக்கும் தீக்குளிப்பு: ரெட்டியாா்சத்திரம் அடுத்த ஸ்ரீராமபுரம் போளியமனூா் பகுதியைச் சோ்ந்த முனியப்பன், இவரது மனைவி கலைவாணி (31) ஆகியோா் தங்களது 3 வயது குழந்தையுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா். அப்போது, பெட்ரோல் ஊற்றி கலைவாணி தீக்குளிக்க முயன்றாா். அவரை மீட்டு, போலீஸாா் விசாரித்த போது, அவா் கூறியதாவது:
எங்கள் பகுதியில் உள்ள தெருக் குழாயில் வரும் தண்ணீரை, அக்கம் பக்கத்தினா் அதிகம் பயன்படுத்துகின்றனா். இதனால், எங்கள் வீட்டின் அருகே தண்ணீா் தேங்கி நோய் பாதிப்பு ஏற்படுகிறது. வீட்டின் சுவரும் சேதமடைந்து வருகிறது. இந்த பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தினாா். தீக்குளிக்க முயன்ற ஐஸ்வா்யா, கலைவாணி ஆகிய இருவரையும் தாடிக்கொம்பு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரித்தனா்.