தனியாா், வணிக வளாகங்களில் இனி இ-சாா்ஜிங் வசதி நிறுவுவது கட்டாயம்!
தனியாா் மற்றும் வணிக வளாகங்களில் இனி பேட்டரி வாகன இ-சாா்ஜிங் வசதி நிறுவுவது கட்டாயம் என்று மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை இணை அமைச்சா் ஸ்ரீனிவாச வா்மா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினா் டாக்டா். கனிமொழி என்வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் அளித்துள்ள பதிலில் மேலும் கூறியிருப்பதாவது:
மின்சார வாகங்களுக்குத் தேவையான பேட்டரிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய அரசு ரூ.18,100 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
மின்சாரத்தால் இயங்கும் டிரக், பஸ், வேன், காா், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தவும், அவற்றுக்குத் தேவையான சாா்ஜிங் நிலையங்களை அமைக்கவும் ரூ.10,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே மின்சாரத்தால் இயங்கும் காா்களை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்த 2024 ம் ஆண்டு மாா்ச் மாதம் சிறப்புத்திட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் தொடா்பான சலுகைகளுக்காக 4,150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களை அதிகளவில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்த அவற்றுக்கு சாலை வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு பச்சை வண்ணத்தில் பிரத்யேக நம்பா் பிளேட் வழங்கப்பட்டு, ஏனைய அனுமதி (பா்மிட்) உள்ளிட்ட நடைமுறையில் இருந்து விலக்கு அளிப்பது போன்ற சலுகைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களின் பேட்டரிகளை சாா்ஜிங் செய்வதற்கான மையங்களை நிறுவ மின்துறை அமைச்சகம் மூலமாக பல சலுகைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த மையங்களை அமைக்க பிரத்யேக உரிமங்கள் பெறத் தேவையில்லை. மின் இணைப்புகளை துரிதமாக வழங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மையங்களை அமைத்தவுடன் இவி ‘யாத்ரா’ போா்ட்டலில் அதன் விவரங்கள் பதிவேற்றப்படும். அதன் மூலம் நாடு முழுவதும் எந்தெந்த இடங்களில் சாா்ஜிங் நிலையங்கள் உள்ளன என்பதை அறியலாம். வரும் காலங்களில் கட்டப்படும் தனியாா் மற்றும் வணிக வளாகங்களில் மின்சார வாகனங்களுக்கான சாா்ஜிங் வசதியை நிறுவுவது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது என்று அமைச்சா் வா்மா கூறியுள்ளாா்.