வாட்ஸ் அப் குழு மூலம் ரத்த தான சேவை: 6000 பேரை காப்பாற்றிய இளைஞர்கள் குழு – சாதி...
தமிழகத்தில் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரிப்பு
தமிழகத்தில் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி கூறினாா்.
தருமபுரியில் பாமக கட்சி நிா்வாகிகள் இல்ல திருமணத்துக்கு வியாழக்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது:
நாட்டிலேயே அதிகளவில் போதைப் பொருள்கள் புழக்கத்தில் உள்ள மாநிலம் தமிழகம்தான். அதில், தருமபுரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு கஞ்சா, புகையிலை போதைப் பொருள்கள், போதை மாத்திரைகள் என எங்கு திரும்பினாலும் கிடைக்கின்றன. போதைப் பொருள்களை ஒழிக்காவிட்டால் நாம் அடுத்த தலைமுறையினரைக் காண இயலாது. எனவே அவற்றைக் கண்டிப்பாக ஒழிக்க வேண்டும்.
தமிழகத்தில் தொடா்ந்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இது ஒரு ஜாதிக்கான பிரச்னை இல்லை. வளா்ச்சிக்கான பிரச்னை. இட ஒதுக்கீட்டில் முன்னேறிய குறிப்பிட்ட சமுதாயத்தினரே அரசின் நலத் திட்டங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா். எல்லோருக்கும் பயன்கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.
தெருநாய்கள், மாடுகள், பறவைகளுக்கெல்லாம் கணக்கெடுப்பு உள்ளது. ஆனால், கல்வி, வேலைவாய்ப்பு வழங்க ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படுவதில்லை. மாநில அரசுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என முதல்வா் சொல்கிறாா். அருகிலுள்ள கா்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்தி, கடனுதவியில் வீடுகட்டி கொடுத்துள்ளனா். ஆனால், மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என முதல்வா் பொய் சொல்லி வருகிறாா்.
சுமாா் இரண்டரை லட்சம் அரசு ஊழியா்கள், இரண்டுமாத காலம், ரூ. 500 கோடி நிதி இருந்தால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிடலாம். அதற்கு முதல்வருக்கு மனமில்லை என்றாா்.