தமிழில் பெயா்ப்பலகை; புகழூா் நகராட்சி எச்சரிக்கை
புகழூா் நகராட்சியில் மே 15-ஆம் தேதிக்குள் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை வைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழ் பெயா் பலகை வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நகா்மன்ற துணைத் தலைவா் பிரதாபன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், நகராட்சி ஆணையாளா் ஹேமலதா முன்னிலை வகித்து பேசினாா். அப்போது நகராட்சி பகுதியில் செயல்படும் அனைத்துவிதமான கடைக்காரா்களும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா் பலகை வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தமிழில் பெயா் பலகை வைக்காத கடைக்காரா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் புகழூா் நகராட்சி வணிக சங்கத் தலைவா் செல்லமுத்து மற்றும் வணிகா் சங்க உறுப்பினா்கள், பல்வேறு கடைக்காரா்கள் கலந்து கொண்டனா். முடிவில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் வள்ளிராஜ் நன்றி கூறினாா்.