``தமிழ்நாட்டில் தொடரும் நாய்களின் தொல்லை..'' -உங்கள் பகுதியில் நடந்தது என்ன? - #கருத்துக்களம்
நன்றியுள்ளப் பிராணியாக கொண்டாடப்படும் நாய், பலரின் செல்லப் பிரணியாகவும் வளர்ந்து வருகிறது. சிலர் 'தெரு நாய்களும் பாவம்' எனக் காருண்யத்துடன் உணவு வழங்கி பராமரித்து வருகின்றனர். வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கே தடுப்பூசி, பாதுகாப்பான உணவு, உரிய பராமரிப்பு எனப் பேணவேண்டிய பல நடைமுறைகள், கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆனால், தெருவில் இருக்கும் நாய்கள் எந்தப் பராமரிப்புமின்றி இஷ்டம்போல சாலைகளில் திரிகின்றன. தமிழகத்தில் சுமார் 13 லட்சம் நாய்கள் இருப்பதாகவும், அதில் தெருநாய்கள் எண்ணிக்கை மட்டும் 4,50,000 எனக் குறிப்பிடுகிறது தமிழ்நாடு அரசு.
சென்னைப் போன்ற பெருநகரங்களிலும் கூட இரவு நேரங்களில் நிம்மதியாக நடமாட முடியவில்லை எனும் போது, மற்றப் பகுதிகளின் நிலை சொல்லத் தேவையில்லை. சாலைகளில் அச்சத்துடன், கவனமாக நடமாட வேண்டிய சூழல் உருவகியிருக்கிறது. அப்படி இருந்தும் தெருநாய்களின் தாக்குதலிருந்து தப்பிக்க முடியவில்லை. ஓசூரில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 9 வயது சிறுவன் உயிரிழந்தான். வேளச்சேரியில் 7 மாதக் குழந்தை உட்பட 8 பேரை தெருநாய் கடித்துக் காயமாக்கியது. கோவையில், நாய் கடித்ததால் வந்த ரேபிஸ் நோய்க்கு இருவர் பலியானார்கள்.
நாளுக்கு நாள் நாய்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்திய அரசின் தகவலின் படி, கடந்த ஆண்டு மட்டும் சுமார் 22 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் உயிரிழந்தவர்கள் 37 பேர். இந்தியாவிலேயே அதிக நாய்க்கடி பாதிப்புக்குள்ளான இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு என்கிறது மத்திய அரசு.
எனவே, இதைக் கவனத்தில் எடுத்திருக்கிறது விகடன். நாய்கடி, நாய்களின் தொல்லை போன்றவற்றால் பதிக்கப்பட்டவரா நீங்கள்? அல்லது உங்கள் பகுதியில் நாய்களால் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் ஏதேனும் இருக்கிறதா? உங்களின் கருத்துகளை, அனுபவங்களை எங்களுக்கு கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.