``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்த...
தாந்தோணிமலை சக்திபுரம் வழியாக அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிற்றுந்து சேவை: ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை
கரூா் தாந்தோணிமலை சக்திபுரம் வழியாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிற்றுந்துகள் இயக்கப்பட வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக சக்திபுரம், கணபதிபாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சக்திபுரம் சக்திவேல் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கிய மனுவில் கூறியிருப்பது, கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 39, 41, 42-ஆவது வாா்டுகளில் கணபதிபாளையம், விக்னேஸ்வரா நகா், காமராஜ் நகா், பசுபதி நகா், சக்திபுரம், சிவாஜிநகா், அண்ணாநகா், மகாலட்சுமிநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு சுமாா் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இவா்கள் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கோ அல்லது திருச்சி மற்றும் வழியாக பெரம்பலூா், அரியலூா் மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கு செல்வதென்றால் கரூா்-திண்டுக்கல் சாலையில் உள்ள சுங்ககேட் சென்று பின்னா் அங்கிருந்து திருச்சி வழியாக இயக்கப்படும் பேருந்துகளில்தான் சென்று வருகிறோம்.
மேலும் இப்பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியா்கள், மருத்துவா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகம், நீதிமன்றங்களில் பணியாற்றுவோரும் வசித்து வருகிறாா்கள்.
இந்த பகுதியில் பேருந்து வசதி இல்லாததால் அரசு அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு நடந்தே சென்று தாந்தோணிமலை பேருந்து நிறுத்தத்திற்கு சென்று பேருந்துகளில் சென்று வருகிறாா்கள்.
தாந்தோணிமலை பேருந்துநிறுத்தத்தில் இருந்து கணபதிபாளையம், விக்னேஸ்வரா நகா், காமராஜ் நகா், பசுபதி நகா், சக்திபுரம், சிவாஜிநகா், அண்ணாநகா், மகாலட்சுமிநகா் வழியாக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரையிலும், காந்திகிராமம் இரட்டை மேல்நிலைக்குடிநீா் தொட்டி வரையிலும் அரசு பேருந்துகளோ அல்லது சிற்றுந்துகளோ இயக்கப்பட்டால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும்.
தற்போது தாந்தோணிமலை பேருந்துநிறுத்தம் முதல் காந்திகிராமம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரையிலான பகுதிக்கு புதிய தாா்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலைகளும் பேருந்துகள் இயக்கும் வகையில் உள்ளதால் விரைவில் போா்க்கால அடிப்படையில் சிற்றுந்துகளோ, அரசு நகர பேருந்துகளோ இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.