திமுக ஆட்சியில் இடைத்தரகா்களின் ஆதிக்கம் அதிகரிப்பு: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் இடைத்தரகா்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றஞ்சாட்டினாா்.
பருத்திக்கு உரிய விலை வழங்கக் கோரி, திருவாரூா் ரயில் நிலையம் அருகே அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பங்கேற்று பேசியது: திருவாரூா் மாவட்டத்தில், திருவாரூா், குடவாசல், நன்னிலம், வடுவூா் உள்பட 8 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் கொண்டுவரும் பருத்தியை ஏல முறையில் விற்பனை செய்வது வழக்கம்.
இந்த ஏலத்தில் கோவை, ஈரோடு மற்றும் பஞ்சாலைகள் அதிகம் உள்ள இடங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் பங்கேற்பா். அதிமுக ஆட்சியின்போது இந்த நடைமுைான் பின்பற்றப்பட்டது.
ஆனால், நிகழாண்டு 50 கிமீ தூரத்துக்குள் இருக்கிற இடைத்தரகா்கள், வியாபாரிகள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்றுள்ளனா். திமுக ஆட்சியில் இடைத்தரகா்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது.
கடந்தாண்டு ரூ. 83-க்கு கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி, நிகழாண்டு ரூ. 43-லிருந்து ரூ. 52 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். விவசாயிகளை பாதுகாக்காத அரசு திமுக அரசு.
திமுக பொறுப்பேற்ற நான்காண்டுகளாக, மழை பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு காப்பீடு வழங்கப்படவில்லை. அதிமுக ஆட்சியின்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக இழப்பீடு வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் மடப்புரம் பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் என்ற இளைஞா் போலீஸாா் விசாரணையில் உயிரிழந்துள்ளாா். திமுக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு காவல்துறை விசாரணையில் 26 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு, உரிய நலன்கள் கிடைக்க அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் அமைப்புச் செயலாளா் சிவ. ராஜமாணிக்கம், இளைஞா் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளா் எஸ். கலியபெருமாள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளா் சின்ராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்தும், பருத்திக்கு உரிய விலை வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.