``திமுக-வுக்கான அறிகுறி இது'' - பொன்முடி மீது மக்கள் சேறு வீசியது குறித்து அண்ணாமலை
ஃபெஞ்சல் புயல் கனமழையில் சென்னை தப்பித்த அதேவேளையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. முழுக்க வெள்ளக்காடாக மாறியிருக்கும் இந்த மாவட்டங்களில் பொதுமக்கள் தங்கள் குடிசைகள், உடைமைகள், கால்நடைகள் ஆகியவற்றை இழந்து தவிக்கின்றனர்.
குறிப்பாக, திருவண்ணாமலையில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் மனித உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. இத்தகைய சூழலில், விழுப்புரத்தில் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளான இருவேல்பட்டு பகுதிக்குச் சென்ற மாநில வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது அப்பகுதி மக்கள் சிலர் சேற்றை வாரி இறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில், ``இதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலை. சென்னையில் மிகக் குறைவான அளவிலேயே மழை பெய்தபோதும், முதல்வரும், துணை முதல்வரும் சென்னையின் தெருக்களில் புகைப்படம் எடுப்பதிலேயே மும்முரமாக இருக்கின்றனர்.
சென்னையைத் தாண்டி என்ன நடந்தது என்பதைக் கண்காணிப்பது குறித்து கவலைப்படவேயில்லை. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை (DIPR), தி.மு.க ஊடகப் பிரிவாகச் செயல்படுவதுடன், வெள்ளத்தின் உண்மையான பாதிப்புகளிலிருந்து மக்களைத் திசைதிருப்ப கோபாலபுர வாரிசுகளை விளம்பரப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது.
இது அரசின் அலட்சியத்தின் தெளிவான அறிகுறி. இன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஊழல் தி.மு.க அமைச்சர் பொன்முடியால், பொதுமக்களின் விரக்தி உச்சத்தை எட்டியது. தி.மு.க-வுக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதற்கான சிறிய அறிகுறிதான் இது." என்று விமர்சித்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...