திருச்சியில் தரையிறங்க முடியாமல் திரும்பிச் சென்ற விமானங்கள்
மழை காரணமாக திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு விமானங்கள் தரையிறங்க முடியாமல் திரும்பிச் சென்றன.
கடந்த இரு நாள்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. திருச்சி மண்டலத்திலும் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்தாலும் இயல்பு நிலையும், போக்குவரத்தும் சற்று பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 7.45 மணிக்கு திருச்சியில் தரையிறங்க வேண்டும். ஆனால் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் திருச்சியில் விமானத்தை தரை இறக்க இயலவில்லை. இதனை அடுத்து விமானம் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இதேபோல், பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு வந்த இண்டிகோ விமானம் 8.35 மணிக்கு திருச்சியில் தரையிறங்க வேண்டும். அந்த விமானமும் மழை காரணமாக திருச்சியில் தரையிறங்க முடியாமல் மதுரைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.