திருப்பூர்: காதலியின் சாவில் மர்மம்; காதலனின் புகாரில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மற்றும் தங்கமணி என்பவரின் மகள் வித்யா.
22 வயதான வித்யா கோவை அரசுக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் விஜயாபுரத்தைச் சேர்ந்த வெண்மணி என்ற இளைஞர் அதே கல்லூரியில் வித்யாவுடன் படித்து வருகிறார்.
மூன்று வருடங்களாக இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெண்மணி வித்யாவின் வீட்டிற்குப் பெண் கேட்டு வந்ததாகவும், வித்யாவின் பெற்றோர்கள் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வித்யாவின் பெற்றோர்கள் கோவிலுக்குச் சென்ற நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வித்யாவின் மீது பீரோ விழுந்து தலையில் காயமடைந்த நிலையில் சடலமாகக் கிடந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து காவல்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் வித்யாவின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் வித்யாவின் நண்பர்களைக் கூட பார்க்க அனுமதிக்காமல் உடலை அருகிலிருந்த சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர்.

வித்யாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது காதலன் வெண்மணி என்பவர் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வெண்மணி அளித்த புகாரின் அடிப்படையில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
மேலும் வட்டாட்சியர், வருவாய்க் கோட்டாட்சியர் முன்னிலையில் புதைக்கப்பட்ட வித்யாவின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய போலீஸார் முடிவு செய்து அதற்கான பணிகளைத் தற்போது தொடங்கினர்.
முதற்கட்டமாக உயிரிழந்த வித்தியாவின் பெற்றோரிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை தலைமைப் பேராசிரியர் மருத்துவர் குகன், உதவி பேராசிரியர் மருத்துவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில், பருவாய் சுடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ள வித்யாவின் உடலைத் தோண்டி எடுத்து அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து பல்லடம் போலீஸார் கூறுகையில், "உயிரிழந்த வித்யாவின் உடலை உடற்கூறாய்வு செய்யப்பட்டதில், அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது முதற்கட்டமாகத் தெரியவந்துள்ளது.
இருப்பினும், அது கொலையா அல்லது விபத்தா என்பது அடுத்த கட்ட விசாரணையில்தான் தெரியவரும். இதுதொடர்பாக வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறோம்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs