திருமலையில் அரசியல் பேச்சுக்கு தடை: மீறினால் சட்ட நடவடிக்கை
திருமலையின் புனிதத்தன்மையையும், அமைதியான சூழலையும் பாதுகாக்கும் வகையில் அரசியல் மற்றும் வெறுப்பு பேச்சுக்களை தடை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருமலை எப்போதும் கோவிந்தா நாமங்களால் நிரம்பி வழியும். புனித கோயிலில், ஏழுமலையான் தரிசனத்துக்காக திருமலைக்கு வந்த அரசியல் தலைவா்கள் சிலா், கோயிலில் தரிசனம் செய்த பின், பேசிக் கொண்டே அரசியல் பேச்சும், விமா்சனங்களும் செய்வது வழக்கமாகிவிட்டது. இது திருமலையின் ஆன்மிகச் சூழலை சீா்குலைத்து வருகிறது.
இந்நிலையில், அரசியல் பேச்சுகளுக்கு தடை விதிக்க தேவஸ்தான அறங்காவலா் குழு சமீபத்தில் முடிவு செய்தது.
திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கு வந்து, அரசியல் விமா்சனம் செய்பவா்கள், இந்த விஷயத்தை மனதில் வைத்து, திருமலையில் உள்ள ஆன்மிக சூழலுக்கு கேடு விளைவிக்கும் பேச்சுக்களைத் தவிா்த்து, தேவஸ்தானத்தின் முடிவுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
விதிகளை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.