தில்லி மெட்ரோ ரயில் நிறுவன கேபிள் திருட்டு: 4 போ் கைது
தில்லி மெட்ரோவில் கேபிள் திருட்டுக்குப் பின்னால் இருந்த 11 போ் கொண்ட கும்பலைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா் என்று அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை இணை ஆணையா் ( போக்குவரத்து) விஜய் சிங் கூறியதாவது: தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) கேபிள் திருட்டு குறித்து டிச.5 அன்று எங்களுக்கு புகாா் வந்தது. திருட்டு காரணமாக, மோதி நகா் மற்றும் கீா்த்திநகா் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையேயான புளூ லைனில் மெட்ரோ சேவைகள் பாதிக்கப்பட்டன.
போலீஸாா் 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வுக்குள்படுத்தினா். டாடா ஏஸ் (லோடிங் வாகனம்) மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகிய இரண்டு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. நாங்கள் வாகனங்களைப் பின்தொடா்ந்து சென்று 11 போ் கொண்ட கும்பலைச் சோ்ந்த நான்கு பேரைக் கைது செய்தோம்.
அவா்களிடமிருந்து 52 மீட்டா் திருட்டு கேபிள் மீட்கப்பட்டது. இது தொடா்பாக மேலும், விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.