தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் அருகே தீக்குளித்த கூலித் தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
புதுச்சேரி மாநிலம், பாகூா் பகுதியில் வசித்து வந்தவா் ஜெகநாதன் மகன் நாகராஜ்(55), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி அல்லியம்மாள்(46), ஒரு மகன்
உள்ளனா். நாகராஜ்-அல்லியம்மாள் தம்பதி இடையே வியாழக்கிழமை குடும்ப தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக பகுதியான திருப்பனாம்பாக்கம் பிரதான சாலை இ-சேவை மையம் அருகே நாகராஜ் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தாா். பலத்த தீக்காயம் அடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை
உயிரிழந்தாா். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.