தூத்துக்குடி நகைக் கடையில் திருட்டு! மும்பை தப்ப முயன்ற இளைஞர் சேலத்தில் கைது!
சேலம்: தூத்துக்குடி நகைக்கடையில் தங்கக் கட்டிகளை திருடிய இளைஞர் மும்பை தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில், சேலம் ரயில்வே காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி, டபிள்யூசிசி சாலையைச் சேர்ந்தவர் விகாஸ் சண்டி. இவர் அதே பகுதியில் தங்க நகைகள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.
இந்தக் கடையில் பணியாற்றி வந்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த விட்டல் சிங்கேடு, கடையில் இருந்து 37 சவரன் (298.400 கிராம்) தங்க கட்டியைத் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் விகாஸ் சண்டேல் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நகை திருட்டில் ஈடுபட்ட விட்டல் சண்டே, நேற்று திருநெல்வேலியில் இருந்து மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பிச் செல்வதாக தூத்துக்குடி மத்திய போலீசார் சேலம் ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் நேற்று இரவு 9:30 மணிக்கு சேலம் ரயில் நிலையம் வந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலம் ரயில்வே காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அதில் பயணித்த விட்டல் சண்டேவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 37 பவுன் நகை, ரூ. 43,330 பணத்தை பறிமுதல் செய்து அவரை தூத்துக்குடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு சேலம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.