வடகரையாத்தூரை பேரூராட்சியாக மாற்ற எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்
தென்னிலை அருகே வாய்க்கால்களில் கழிவு நீா் கொட்டப்படுவதாகப் புகாா்
கரூா்: கரூா் மாவட்டம், தென்னிலை அருகே வாய்க்கால்களில் கொட்டப்படும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சமூக நல ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
கரூா் மாவட்டம் தென்னிலையை அடுத்த கரைப்பாளையம் விவசாயம் நிறைந்த பகுதி. இந்நிலையில் கரூா் நகரப் பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை எடுத்துச் செல்லும் செப்டிக் டேங்க் வாகன ஓட்டிகள் கரைப்பாளையம் பகுதி விவசாய நிலங்களுக்குச் செல்லும் வாய்க்கால்களில் திறந்து விடுவதால், அப்பகுதியில் சுகாதாரக்கேடும், விளை நிலங்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அப்பகுதி சமூக நல ஆா்வலா்கள் கூறுகையில், க.பரமத்தி, தென்னிலை பகுதிகளில் செயல்படும் சில உணவகங்களில் இருந்தும், கரூா் நகர பகுதிகளில் இருந்தும் கழிப்பறை கழிவு நீரை லாரி, வேன்களில் எடுத்து வந்து விவசாய வாய்க்கால்களில் திறந்து விட்டு செல்கிறாா்கள். முன்பெல்லாம் இரவுகளில் மட்டும் இவ்வாறு செய்தவா்கள் இப்போது பகல் நேரங்களிலேயே கழிவுநீரை வாய்க்கால்களில் திறந்துவிடுகிறாா்கள். இந்தக் கழிவுநீரில் இருந்து வெளியேறும் துா்நாற்றத்தால் அப்பகுதியில் செயல்படும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.