தெலங்கானாவை வெளுத்து வாங்கும் கனமழை! மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட்!
தெலங்கானாவில், தலைநகர் ஹைதராபாத் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கனமழை தீவிரமடைந்துள்ளதால், அம்மாநிலம் முழுவதும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதியால், தெலங்கானா மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது.
இதனால், அடுத்த 2 நாள்களுக்கு அம்மாநிலம் முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக, தெலங்கானா வானிலை ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சங்காரெட்டி, விக்காரபாத், மெடாக், மெட்சால் - மல்காஜ்கிரி, யத்தாத்ரி புவனகிரி, கம்மம், பத்ராத்ரி, கொதாகுடெம், புபால்பள்ளி மற்றும் முழுகு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (ஆக.13) மற்றும் நாளை (ஆக.14) ஆகிய இரண்டு நாள்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன், ஹைதராபாத், ஹனுமாகொண்டா, அதிலாபாத், ஜன்காவோன், காமாரெட்டி, குமுராம் பீம் ஆசிஃபாபாத், மஹபூபாபாத், மன்செரியால், நல்கொண்டா, ரங்காரெட்டி, சித்திபேட் மற்றும் வாராங்கல் ஆகிய மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பருவமழை தொடங்கியது முதல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகின்றது. ஹைதராபாத் நகரத்தில் பெய்த கனமழையால், அங்குள்ள பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:பருந்துப் பார்வையில்... மனதை மயக்கும் பெங்களூர் மெட்ரோ!