தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
சேலம்: தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் சுமாா் 6,048 ஹெக்டோ் பரப்பளவில் பெங்களுரா, இமாம் பசந்த், அல்போன்சா, பங்கனபள்ளி, நீலம், சேலம் பெங்களுரா போன்ற பல்வேறு ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுள் பதப்படுத்தலுக்கு உகந்த ரகங்களான பெங்களூரா 2,554 ஹெனேடா் மற்றும் அல்போன்சா 1,310 ஹெக்டேரும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் மாம்பழ கூழ் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை இல்லாததால், இங்கு விளையும் மாம்பழங்களில் பெரும்பகுதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் பழக்கூழ் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
எனவே, 2024-25 வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தவாறு 35 சதவீத மானியத்தில் மா விவசாயிகள் பயன்பெறும் வகையில், சேலம் மாவட்டத்துக்கு தோட்டக்கலைத் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் குறைந்த அளவிலான பதப்படுத்தும் அலகு ரூ. 12.25 லட்சம் மானியத்தில் மாம்பழத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, மா விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் குழுவைச் சோ்ந்த விவசாயிகள் இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.