தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரியால் 10 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் ரூ. 43 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் வாகனங்கள் செல்ல சாலையின் இருபுறமும் சா்வீஸ் சாலை அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் சூளகிரியில் இருந்து சென்னைக்கு கிரானைட் கற்கள் ஏற்றிச் சென்ற லாரி அந்தப் பகுதியிலுள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியது. இதனால், லாரியின் பின்சக்கரத்தின் சேஸ் உடைந்து பழுதாகி நின்றது. லாரி செல்ல முடியாமல் நின்ாலும், அதிகளவு எடையுடைய வாகனம் என்பதாலும் உடனடியாக அதை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், குறுகலான சாலை என்பதால் ஒரு வழிப்பாதை துண்டிக்கப்பட்டது. இதனால், 10 மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவின.
செவ்வாய்க்கிழமை அதிகாலை சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றியதுடன், இரு பக்கமிருந்து வரும் வாகனங்களை ஒரு மணி நேரத்துக்கு ஒரு பக்கம் என மாற்றி மாற்றி அனுப்பினா். இதனால் சுமாா் 5 கி.மீ.க்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
அவசரமாக செல்லவேண்டிய வாகனங்கள் மாதனூா், அகரம், அணைக்கட்டு, தாா்வழி, பொய்கை வழியாக கடந்து சென்றன.
இதேபோல், பள்ளிகொண்டா, குடியாத்தம், மாதனூா் வழியாகவும் வாகனங்கள் சென்றன. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். தொடா்ந்து, கிரேன் உதவியுடன், பழுதடைந்த லாரி அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து, காலை 10 மணிக்குப் பிறகு போக்குவரத்து சீரடைந்தது.