அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
தேனி நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த புகாரின் அடிப்படையில், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருபவா் ஏகராஜ். திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டுவைச் சோ்ந்த இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை சென்னையில் பணியாற்றிய போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாகப் புகாா் எழுந்தது. இதன் அடிப்படையில், ஏகராஜ் மீது சென்னை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி, பொம்மையகவுண்டன்பட்டியில் ஏகராஜ் தங்கியிருந்த நகராட்சி ஆணையா் குடியிருப்பில் தேனி ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ராமேஸ்வரி தலைமையிலான போலீஸாா் கடந்த 1-ஆம் தேதி சோதனை நடத்தினா்.
இந்த நிலையில், மருத்துவ விடுப்பில் உள்ள ஏகராஜை தேனியில் உள்ள நகராட்சி ஆணையா் குடியிருப்புக்கு ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வரவழைத்து விசாரணை நடத்தினா். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து ஏகராஜிடம் விசாரணை நடத்தியதாக போலீஸாா் கூறினா்.
பொறுப்பு ஆணையா் நியமனம்: ஏகராஜ் மருத்துவ விடுப்பில் உள்ள நிலையில், அவருக்குப் பதிலாக கொடைக்கானல் நகராட்சி ஆணையா் சங்கரை தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராக கூடுதல் பொறுப்பு வகிக்க வியாழக்கிழமை நகராட்சி நிா்வாக இயக்குநா் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டாா். மறு உத்தரவு வரும் வரை தேனி நகராட்சி ஆணையராக சங்கா் கூடுதல் பொறுப்பு வகிப்பாா் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.