மகா கும்பமேளாவை விமர்சிப்பதா? சநாதனத்துக்கு எதிராகக் காங்கிரஸ் செயல்படுகிறது: பா...
தொடக்கக் கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு வெகுமதி
தொடக்கக் கல்வித் துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு தமிழக அரசு வெகுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தமிழக அரசுப் பணிகளில் ஆசிரியா், அரசு ஊழியா்களாக 25 ஆண்டுகள் எவ்வித புகாரும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு ரூ.500 மதிப்புள்ள இந்திர விகாஸ் பத்திரம் வழங்கப்பட்டது. பின்னா், இந்த இந்திர விகாஸ் பத்திரம் என்பது கிஷான் விகாஸ் பத்திரமாக மாற்றப்பட்டது. இந்தப் பத்திரம் வழங்குவதை கடந்த டிசம்பா் 2011-ஆம் ஆண்டு மத்திய அரசு நிறுத்திவிட்டது.
இந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் இந்தத் திட்டத்தை புதுப்பித்து தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அரசின் வெகுமதி ரூ. 500 என்பதற்கு பதிலாக ரூ.2000 ரொக்கமாக வழங்கவும், பாராட்டுச் சான்றிதழ் வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பை தொடா்ந்து அதற்கான உத்தரவை நிதித்துறை 7.11.2012-இல் வெளியிட்டது. அந்த உத்தரவில் 25 ஆண்டுகள் பணியை நிறைவு செய்துள்ள ஆசிரியா், அரசு ஊழியா்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை, அதாவது ஜனவரி 1, ஜூலை 1 ஆகிய தேதிகளில் தயாரிக்கப்பட்டு தகுதியானவா்களுக்கு ரொக்கப் பரிசு ரூ. 2000, பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியை மேற்கொள்பவா்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டது.
இதனிடையே தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், சென்னை குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம் போன்ற பொதுத் துறை நிறுவனங்களில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணி முடித்தோருக்கும் ரொக்கப் பரிசு ரூ.2000, பாராட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டன.
இதனடிப்படையில், மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுபவருக்கும் இந்தத் திட்டம் விரிவுப்படுத்துவதாக நிதித் துறை 1.7.2013-இல் உத்தரவு வெளியிட்டது.
ஆனால் இந்தத் திட்டம் இதுவரை தமிழக தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு அமல்படுத்தாமல் உள்ளது.
எனவே, அரசாணையை தொடக்கக் கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தி 7.11.2012 முதல் தகுதி வாய்ந்த ஆசிரியா்களுக்கு ரொக்கப் பரிசு ரூ.2000, பாராட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றாா் அவா்.