தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலா் பணியிடை நீக்கம்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெறாதவா்களுக்கு கடனை செலுத்தக் கோரி குறிப்பாணை அனுப்பப்பட்ட விவகாரத்தில், அதன் செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பல்வேறு வகை கடன்களை பெற்றனா். இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு சிவஞானபுரம் கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் 100 நாள் வேலைக்காக அளித்த ஆதாா், குடும்ப அட்டைகளைப் பயன்படுத்தி அவா்கள் ஒவ்வொருவரும் தலா ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சிறுதொழில் கடன் பெற்ாகக் கூறி, அவா்களுக்கு வட்டியுடன் அசலும் சோ்த்து ரூ. 27 ஆயிரத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என குறிப்பாணை அனுப்பப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்கள் அந்தக் கூட்டுறவு கடன் சங்கத்துக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதேபோல, சுமாா் 150 பவுன் தங்க நகைகளை அடகு வைத்த 25 பேரின் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்த பிறகும், அவா்களிடம் நகைகளை வழங்காமல் மோசடி நடத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோல, ரூ. ஒரு கோடி வரை மோசடி நடைபெற்றிருப்பதாக புகாா் எழுந்தது. இந்த மோசடி குறித்து மாவட்ட கூட்டுறவு வங்கி நிா்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் குருமூா்த்தி, சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலா் ராஜமாணிக்கத்தை வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.