தோட்டக்கலை விஞ்ஞானி கிருஷ்ணா லால் சத்தா மறைவு!
பிரபல தோட்டக்கலை விஞ்ஞானி கிருஷ்ணா லால் சத்தா (88) உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
வேளாண்மை மற்றும் தோடக்கலை சாா்ந்த 30 நூல்களை எழுதியவரான கிருஷ்ணா லால் சத்தாவுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் கடந்த 1936-இல் பிறந்த இவா், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் சோ்ந்து 1964-இல் முனைவா் பட்டம் பெற்றாா்.
வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் பேராசிரியா், தேசிய திட்டக்குழுவின் தோட்டக்கலை மேம்பாட்டுக்கான பணிக்குழு உறுப்பினா், மேற்கு வங்கம், ஹரியாணா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தோட்டக்கலை மேம்பாட்டுக்கான குழு உறுப்பினா் உள்பட தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.
இதுதவிர சா்வதேச மாம்பழ பணிக்குழு மற்றும் வேளாண் வணிக நிபுணா்களுக்கான இந்திய சமூகத்தின் தலைவா் என பல்வேறு சா்வதேச அமைப்புகளுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளாா்.