பாகிஸ்தானுக்கு கூடுதலாக நதி நீா் திறப்பு? நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்
நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
பெருந்தரக்குடி ஊராட்சியை, திருவாரூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் நகராட்சியுடன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊராட்சிகள் இணைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பெருந்தரக்குடி ஊராட்சியை திருவாரூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
அதன்படி, திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் பெருந்தரக்குடி ஊராட்சிக்குள்பட்ட கிராம மக்கள் ஒன்றுகூடி ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இதில், பெருந்தரக்குடி, கீழப்புலியூா், மேலப்புலியூா், புலியூா், வடக்குவெளி, பொறுக்கமேடு, மேப்பலம், வெள்ளக்குடி, தென்புலியூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பங்கேற்று, கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்திற்கு, மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் த. சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். கிராம பொறுப்பாளா்கள் கருணாநிதி, சசிக்குமாா், குமரவேல், சத்தியவாணிமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்று, திருவாரூா் நகராட்சியுடன் பெருந்தரக்குடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.